-க.சபேஷன்-
‘கிவுல் ஓயா’ திட்டத்தை அரசாங்கம் தொடருமாக இருந்தால் வடக்கில் உள்ள அரச அலுவலகங்களை முடக்கி வரலாறு காணாத போராட்டங்கள் நடக்கும் அதற்கு இடமளிக்கவேண்டாம், இன்று நடைபெற்றது ஒரு முன்னோட்டம் மட்டும்தான் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறினார்.
வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தில் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது. இதன் போதே இரா.சாணக்கியன் மேற்படி விடயத்தை ஜனாதிபதிக்கு கூறுமாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், இன்றைய மக்களை போராட்டம் ஒரு முன்னோட்டம் அல்லது ஒரு மாதிரி மட்டும்தான். இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்து கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக நிறுத்த தவறினால் அரச அலுவலகங்களை முடக்கி வரலாறு காணாத போராட்டங்களை நடத்துவோம். அதற்கு இடமளிக்கவேண்டாம்.
வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான இந்த திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும். கைவிட்டால் நாமும் எமது போராட்டத்தை கைவிடுவோம். மாறாக திட்டத்தை தொடர்ந்தால் அமைதிவழி போராட்டம் அல்ல, அமைதியற்ற போராட்டங்களை நடத்துவதற்கும் நாம் தயார் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு கொடுங்கள் என்றார்.


















