கிவுல் ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு அமைவாக நேற்று முன்தினம் பொது அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
எனினும் குறித்த சந்திப்பில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிறிடெலோ கட்சியின் சார்பில் ஒருவரும் கலந்து கொண்டதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
எனினும் குறித்த கூட்டம் இடம்பெற்றபோது அனைத்து தமிழ் கட்சிகளும் இந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவார்களா? அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு தூதரகங்களுக்கு கடிதங்களை அனுப்புவார்களா? அதற்கு தயாராக உள்ளார்களா என்ற கேள்வியை பொது அமைப்புக்களின் சார்பில் ஒருவர் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம்:-
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழ் கட்சிகள் கூடி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எனினும் அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மாத்திரமே கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும் அவர்களும் குறித்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர் என்றார்.


















