-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை-
-த.சுபேசன்-
கைதடி வடக்கு – நீர்வேலி இணைப்பு வீதியை காப்பெற் அல்லது தார் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மராட்சி பிரதேச செயலரிடம் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் க.சிவபாதம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கைதடி வடக்கு தச்சன்பிட்டி இந்துமயானம் அருகே ஆரம்பித்து நீர்வேலியின் பழைய கண்ணாடித் தொழிற்சாலை அருகாக பருத்தித்துறை வீதியுடன் இணைக்கும் மேற்படி இணைப்பு வீதி நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் பாலம் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் இருப்பதனால் இவ்வீதியை பயன்படுத்துவதில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தவீதி முழுமையாக புனரமைக்கப்படும்போது கைதடியிலிருந்து நீர்வேலி வாழைக்குலை சங்கத்துக்கு விவசாயிகள் தமது வாழைக்குலைகளை கொண்டு செல்வதற்கு இலகுவாக அமையும் என்பதுடன் வலி.கிழக்கின் விவசாய உற்பத்திப் பொருட்களை மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இந்தப் பாதை ஊடாக இலகுவாக கொண்டு செல்லமுடியும்.
இது தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருடன் நேரில் கலந்துரையாடியிருந்தேன். இது நல்ல விடயம் எனவும் வலி.கிழக்கு மற்றும் சாவகச்சேரி பிரதேசசபைகள் இணைந்து இந்த வீதிக்கான கோரிக்கையை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரேரிக்கும் போது அதனை செயற்படுத்துவது இலகுவாக இருக்கும் என்றும் இது தொடர்பாக தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் எனக்குத் தெரிவித்திருந்தார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் ஊடாக இந்த வீதியை புனரமைப்பு செய்வதற்கு போதிய நிதி வசதிகள் இல்லாத காரணத்தினால் வீதி அபிவிருத்தித் திணைக்களம் அல்லது வீதிஅபிவிருத்தி அதிகார சபை ஊடாக நிதி ஒதுக்கீடு செய்து காபெற்றாகவோ அல்லது தார் வீதியாகவோ புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மேலும் அவர் தென்மராட்சிப் பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


















