-பண்ணை அமைக்க 122 இடங்கள் அடையாளம்-
-சு.பாஸ்கரன்-
கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்குச் சென்ற அதிகாரிகள் பண்ணையாளர்களின் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் பா.நிருபராஜ், பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம அலுவலர், பொலிஸார் ஆகியோர் நேற்று முன்தினம் அங்கு சென்றபோது கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தமது வாழ்வாதாரமாக கடலட்டை பண்ணைத் தொழிலை மேற்கொள்வதாகவும் உரிய அனுமதி பெறும்வரை அகற்ற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து அதிகாரிகளுக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதைத் தொடர்ந்து .தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினால் கடலட்டை பண்ணை அமைப்பதற்குரிய 122 இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டது.
இதற்கமைய 122 பயனாளிகளின் பெயர், விபரங்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்பு பிரதேச செயலகத்திடம் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டவிரோத கடலட்டை பண்ணையாளர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுமாறு பல தடவைகள் தெரிவிக்கப்பட்ட போதும் அகற்றப்படாமையினால் அதனை அகற்றும் நோக்குடன் அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















