-தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயற்சி-
-சொ.வர்ணன்-
அரசாங்கத்தினால் சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சட்ட விரோத கரவலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமையை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் செயற்பாட்டுக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.
கடந்த வாரம் சட்ட விரோத கரவலையை நிறுத்தியமைக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முறையற்ற சட்ட விரோதமான தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டமையை வடபகுதி மீனவர்கள் சார்பில் கண்டிக்கின்றோம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடபகுதி கடலில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை தடுக்க வேண்டும் என வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த சஜித் பிரேமதாசவிடம் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை தடை செய்ய வேண்டும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.
ஆனால் சஜித் பிரேமதாச கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் இடம்பெற்ற சட்டவிரோத மீன்பிடியை தடை செய்தமைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டமை அவரின் வங்குரோத்து அரசியலை எடுத்துக் காட்டுகிறது.
இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களிடம் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு பல்வேறு சந்தர்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறையை மட்டும் தடை செய்திருக்கிறார்கள். சட்டவிரோத அனைத்து மீன்பிடி முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மீனவர்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையாகவும் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


















