-கஜிந்தன்-
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கடற் சாதாளைகளையும் அகற்றி சுற்றுலா தளத்தை சுற்றுலாவிகளை கவரும் வகையில் அழகுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த விடயம் குறித்து முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டி கடற்கரை இருக்கின்றது. இக்கடற்கரையின் அழகு இந்த சவுக்கு மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கள் முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு உள்ளாக்கும் வகையிலும் இருக்கின்றன. இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும்.
அதேபோன்று இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசளைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


















