-வன்மையாக கண்டித்துள்ள தென் கயிலை ஆதீனம்-
-க.சபேஷன்-
தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை தென் கயிலை ஆதீனம் மிக வன்மையாக கண்டித்துள்ளது.
மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை பொலிஸார் காண்பித்தமை இந்த நாட்டின் சைவ சமயத்தவர் அனைவரையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது
இலங்கையில் உள்ள அனைத்து மதத் தலைவரைகளையும் சமனாக மதிக்க வேண்டிய காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும் இந்த மண்ணின் மைந்தர்களான மதத் தலைவர்களை மலேச்சுதனமாக நடாத்துவதும் உண்மையை நேசிக்கும் அனைவராலும் ஜீரணிக்க முடியாத செயலாகும்
சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒருதலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக் கட்டிடத்திற்காக அதனை எதிர்த்துப் போராடிய சைவசமயத்துறவியை மிலேச்சத்தனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சைவ சமயத்தை ஒரு பொருட்டாக மதிக்காது அவமதித்த செயலாகவே கருத வேண்டியுள்ளது
இந்த விடயத்தில் ஜனாதிபதியும் மதவிவகார மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட பொலிஸார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என இலங்கையின் சைவ சமய ஆதீன முதல்வர்களில் ஒருவர் என்ற வகையில் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான எமது சமயத்தலைவர்களை அவமதிக்கும் செயலை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோருவதுடன் இன ,மதங்களிடையே அதன் மூலம் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏறப்டுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
அதே நேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டடுள்ள தவத்திரு வேலன் சுவாமிகள் நலம்பெற இறை சிவனை பிரார்திப்பதோடு எம் அனைவரது அன்பையும் ஆதரவையும் சுவாமிகளுக்கு திருகோணமலை தென் கயிலை ஆதீனம் சார்பாக வெளிப்படுத் நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


















