-உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி-
-செ.ரவிசாந்-
யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் சார்ந்து தெரிவித்துள்ள கருத்துக்களை உள்வாங்கி இது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடனும், வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினருடனும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள மேற்படி நிறுவனத்தின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நிறுவனத் தலைவர் கெ.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சைகை மொழி பேசும் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அலுவலகங்களில் இல்லாமலிருப்பது பெரும் குறைபாடென இந்த நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடித் தீர்வைப் பெற்றுத் தருவேன். எனக்கு இந்த வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் 10 வீதமான ஒரு மில்லியன் ரூபாவை இந்த நிறுவனத்துக்காக ஒதுக்கின்றேன். இந்த நிதியை உற்பத்தியொன்றைப் பெருக்குவதற்கான முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயற்பாடுகளைப் பொறுத்து எதிர்வரும் காலங்களிலும் உதவத் தயாராகவிருக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


















