-த.சுபேசன்-
சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வெற்றிலை துப்புபவர்கள் மற்றும் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
பொது இடங்களில் வெற்றிலை துப்புதல் ஒரு நீண்ட காலப் பிரச்சனையாகவுள்ளது.
முதல் தடவையாக குற்றத்தை செய்வதற்கு 2,000 ரூபாவும், இரண்டாம் முறை குற்றத்தை செய்யும் போது 5,000 ரூபாவும் தண்டமாக அறவிடப்படவுள்ளது.
குறிப்பாக நகரசபை எல்லைக்குட்பட்ட சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வெற்றிலை துப்புதல் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படவுள்ளது.
அதேநேரம் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தும் பம்பேர்ஸ் போன்ற கழிவுகளை வீதிகளில் வீசுவது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
எனவே, அதனை தவிர்க்கும் முகமாக முதற்தடவையாக கழிவுகளை வீசுவோருக்கு 5,000 ரூபாவும் அதே குற்றத்தை மீளவும் நிகழ்த்தினால் 10,000 ரூபாய் தண்டப்பணமும் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கழிவுகளை நவீன முறையில் அழிப்பதற்கான நடவடிக்கைகளை நகரசபை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளது. அதுவரை பொதுமக்கள் இவ்வாறான கழிவுகளை வீதிகளில் வீசாமல், நகரசபையால் ஒதுக்கப்பட்ட கழிவு தொட்டிகளில் இட்டோ அல்லது தத்தமது வீடுகளில் பாதுகாப்பாக எரித்தோ அழிக்க முடியும் என்றார்.















