-செ.ரவிசாந்-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொக்குவிலிலுள்ள மேற்படி கட்சியின் அலுவலகத்தில் மாவீரர் சேரமானின் புதல்வர் றுஷாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நினைவுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கொக்குவில் பிரம்படிப் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மு.ஈழத்தமிழ்மணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இலங்கை வான்படை நடாத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு போராளிகள் கொல்லப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


















