செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப் புதைகுழியாக உருவெடுத்திருக்கின்றது. இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை அரசும் என்ன பதிலை கூறப் போகின்றது? என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செம்மணி மனித புதை குழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய இனத்தின் மீதான அழிவுகளை இலங்கை அரசினுடைய ஒவ்வொரு ஆட்சியாளர்களும் செய்து கொண்டே வருகின்றார்கள். ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக எங்களுடைய இனத்தை அழித்ததற்கான சாட்சிகள் இறைவனின் கிருபையால் தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை அரசும் என்ன பதிலை கூறப் போகின்றது?
செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப் புதைகுழியாக தற்போது உருவெடுத்திருக்கின்றது. தமிழர் தாயப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் மனிதப் புதைகுழிகள் உள்ளன. அவற்றை தோண்டத் தொடங்கினால் அதிகளவான எண்புக்குவியல்கள் கிடைக்கப்பெற்று கொண்டே இருக்கும்.
குறிப்பாக வட்டுவாகால் விகாரைக்கு கீழே அகழ்வுகளை மேற்கொண்டால் செம்மணியை விட மிகப்பெரிய ஒரு மனித புதைகுழி அடையாளம் காணப்படும். விகாரையை உடைத்து அகழ் பணிகளை மேற்கொள்ளத் தேவையில்லை. நவீன கருவிகளை வைத்து ஸ்கான் செய்தே எத்தனை என்புத் தொகுதிகள் இருக்கின்றன என்பதை ஆராய முடியும். இதேபோல் கேப்பாப்புலவு போன்ற பல இடங்களில் மனிதப் புதைக்குழிகள் இருக்கலாம் என மக்கள் அச்சப்படுகின்றார்கள்.
வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மனிதப் புதை குழிகள் அனைத்தும் தோண்டப்பட வேண்டும். இதில் சர்வதேசம் தலையிட்டு எமக்கான நீதியினை வழங்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு, என்றார்.(12)
















