-சொ.வர்ணன்-
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்டவைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதியை அரசாங்கம் தடையின்றி ஒதுக்கீடு செய்துவருகிறது. இந்நிலையில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்டவைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதில் ஒருவரை அகழ்வுப் பணிகளிலிருந்து நீக்கியுள்ளனர். பாராளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்டக் குழுவில் நான் பங்குபற்றியிருந்த நிலையில், செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது, ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்டவைத்திய அதிகாரியை, நியமிக்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்தேன். அதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் சேர்க்கப்பட்டார்.
குறித்த வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாகவும், பின்னர் அவர் நீக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசவுள்ளதுடன், நீக்கப்பட்ட சட்டவைத்திய அதிகாரியை மீள இணைப்பதற்கு, நடவடிக்கை எடுப்பேன் என்றார்.


















