-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்-
வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்களை இனங்கண்டு, அவற்றை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வழங்கப்பட்ட எந்தவொரு இடமாற்றமும் மேன்முறையீடு காரணமாக நிறுத்தப்பட்டால், அந்த வெற்றிடத்துக்குப் பதிலாக உடனடியாக மாற்று இடமாற்றமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான இடமாற்றங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பாடசாலைகளில் இடம்பெறும் முறையற்ற பண அறவீடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்ட ஆளுநர், இலவசக் கல்வி நடைமுறையில் உள்ளபோதிலும், பாடசாலைகளில் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களிடம் பணம் அறவிடும் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இது தொடர்பில் எனக்கு தினமும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன.
சில பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட சில பெற்றோர்கள் ஊடாகப் பணத்தை அறவிடும் செயற்பாட்டை முன்னெடுத்துவிட்டு, அதற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என நழுவப் பார்க்கின்றனர். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்குத் திடீர் களப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கு இருப்பில் பதிவு செய்யப்படாமல் அன்பளிப்புகள் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதிபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இவ்விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே இவ்வாறான செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளார்.


















