எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசு ஒதுக்கிய நிதி ஜூன் மாதத்துடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதிக் குழுவின் முன் முன்னிலையாகியிருந்த போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.100 மானியமும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மானியமும் அரசு வழங்குகிறது.
இதற்காக ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் ரூ.15.3 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், மொத்த மானியத் தொகை சுமார் ரூ.20 பில்லியன் என்றும் அப்போது வெளிப்படுத்தப்பட்டது. எனினும், தற்போதைய போக்கின்படி ஜூன் மாதத்துடன் இந்த மானிய நிதி முடிவடையும்.
ஜூன் மாதத்திற்குப் பின் மானியத்தைத் தொடர்ந்து வழங்குவது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு ரூ.100 மானியம் வழங்கினாலும், ஏப்ரல் மாத தரவுகளின்படி ஒரு லீட்டர் டீசலில் நிறுவனத்துக்கு ஏற்படும் மொத்த இழப்பு ரூ.129 ஆகும்.
அரசின் மானியத்துக்குப் பின்னரும் நிறுவனம் இன்னும் ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.29 இழப்பைச் சுமக்கிறது என தெரிவித்துள்ளார்.
















