-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு கவலை-
கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை எந்த ஒரு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.
யாழ். சிவகுரு ஆதீனத்தில் நேற்று முன்தினம் மாலை முன்னெடுக்கப்பட்ட ‘நீதிக்கான சாட்சி’ என்ற நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டு சாட்சி உரையாற்றுக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சி காலங்களில் அரசியல் கைதிகள் ஏதோ ஒரு பொறிமுறையில் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். இலங்கை – இந்தியா ஒப்பந்தம் தொடக்கம் சமாதான காலம் வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டும், பரிமாறப்பட்டு கொண்டும் இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில், நீதிமன்றங்களில் வழக்கு காணப்பட்டபோது கூட இரவோடு இரவாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
ஆனால் தற்போது இருக்கின்ற அரசாங்கம் வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஒரு அரசியல் கைதியை கூட இதுவரை விடுதலை செய்யவில்லை. நாங்கள் கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோருக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதைவிட நீதி அமைச்சரை நேரில் கூட சந்தித்திருந்தோம். ஆனால் எமக்கு ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியுள்ளது.
தற்போதுள்ள அரசாங்கமானது அடக்கு முறைக்கு எதிராக இரண்டு தடவை ஆயுதம் தூக்கி போராடியது. இவ்வேளைகளில் அரசியல் கைதிகள் இருந்தனர். இவர்கள் ஒரு பொறிமுறை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று ஆட்சியில் உள்ளவாகள்; வலியை உணர்ந்தவர்கள். வழிவிடுகாரர்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று வரை அது தொடர்பான எந்த விதமான சமிக்ஞைகளும் தென்படவில்லை.
விடுதலைப் போர் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர்களை சிறையில் வைத்திருப்பதில் எந்தவிதமான நியாயமும் இல்லையென்பதால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை என்றார்.


















