மாகாணசபைத் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கூட்டப்படவேண்டும். சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை தெரிவுக்குழு மேற்கொள்ளவேண்டும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 12 பேரடங்கிய விசேட செயற்குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இச்செயற்குழுவுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில் அங்கம் வகிக்கும் எமது கட்சி உறுப்பினர் இரா.சாணக்கியன், செயற்குழுவின் முதலாவது கூட்டம் விரைவாகக் கூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். எனவே இத்தெரிவுக்குழுவை நியமிப்பதில் இழுத்தடிப்பு நிலவிய போதிலும், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இழுத்தடிப்பின்றி துரிதமாக முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோன்று மாகாணசபைத் தேர்தல்களை பழைய முறைமையில் நடாத்துவதற்கான தனிநபர் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் முன்வைத்த சாணக்கியன் இக்குழுவில் அங்கம் வகிக்கும் நிலையில், அவரது தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை இத்தெரிவுக்குழு மேற்கொள்ளவேண்டும். அதனூடாக அப்பிரேணை துரிதமாக நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைத் தேர்தல்கள் பழைய முறைமையில் விரைவாக நடாத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


















