உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது வடக்கில் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக ஒலிரவிடப்பட்ட பாடல் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பாடலாகும். அந்தப் புலிகளின் பாடலுக்கு பொறுப்புக்கூறுவது யாரென பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பி மேலும் பேசுகையில்,
‘‘கிளிநொச்சியில் இளைஞரொருவர் விடுதலைப் புலிகளின் பாடலைப் பாடியதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படடு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால், கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது வடக்கில் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக ஒலிரவிடப்பட்ட பாடல் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பாடலாகும். அந்தப் பாடல் உங்களது பாராளுமன்ற உறுப்பினர்களின் பேஸ்புக்கில் பகிரப்பட்டன. உங்களது தேர்தல் மேடையில் போடப்பட்ட புலிகளின் பாடலுக்கு யார் பொறுப்பு கூறுவது? அதேபோன்று, சுரேஷ் சலே இன்று முற்றாக அரசியல் தேவைக்காக செயற்படுத்தப்படுகிறார். அவரை கைது செய்து விசாரணை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்காக நாங்கள் வழிபாடு செய்வது பிரச்சினையா? இந்த நாட்டின் இராணுவ வீரர்களுக்காக நாங்கள் முன்னிற்போம். அது உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.
இந்த விடயத்தை அரசாங்கம் அரசியலுக்காக பயன்படுத்த முயற்சித்து வருகிறது. எனவே, அரசாங்கம் எந்த விசாரணையை வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அதனை உங்களது அரசியல் மேடைகளின் கருப்பொருளாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அநீதி ஏற்படுகிறது’’ என்றார்.
















