-இ.கலைஅமுதன்-
தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் காணி விடுவிப்பு பிரச்சினை பிரதானமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. அது தொடர்பாக எமது அரசாங்கத்தாலும் கூட நாம் வாக்குறுதி அளித்தோம்.
தையிட்டி விகாரை பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்பட வேண்டும். அதனை அண்டியிருக்கின்ற அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதிலும் கூட அதில் நூற்றுக்கு 80 வீதமான செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளோம். அந்த காணி உரிமையாளர்களை இனம் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த காணிகளை இனம் கண்டு அளவிட்டு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில், பௌத்த சாசன அமைச்சர் சுனில் சனவி தலைமையிலான குழுவில் நானும் இருக்கிறேன். அந்த குழுவில் நீதி அமைச்சர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், அது சார்ந்த அனைத்து அதிகாரிகளும், விகாராதிபதியும் அதில் இருக்கிறார்கள்.
அனைவருடனும் இணைந்து சுமுகமான முடிவை கொண்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மிகச் சீக்கிரமாக அதனை செய்வோம் என்றார்.


















