தொழிலதிபர் அமரர் எஸ்.பி.சாமியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வேலணை பிரதேசசபைக்கு முச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தினக்குரல் மற்றும் நொதேன் சென்றல் வைத்தியசாலை ஆகியவற்றின் நிறுவுனர் எஸ்.பி.சாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று நொதேண் சென்றல் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நிறுவுனரின் திருவுருவ சிலை திறந்துவைக்கப்பட்டதுடன், சுன்னாகம் வாழ்வகம் நிறுவனம் மற்றம் யாழ்.விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியவற்றின் ஊடாக யாழ்.பல்கலைகழகத்திற்கு தெரிவாகி அண்மையில் பட்டம் பெற்று வெளியேறிய நான்கு மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியை எஸ்.பி.சாமி நினைவாக குடும்பத்தினர் சார்பில் அவருடைய இளைய மகனும், யாழ்.தினக்குரல் மற்றும் நொதேண் சென்றல் வைத்தியசாலை ஆகியவற்றின் முகாமைத்துவப் பணிப்பாளர், வைத்திய கலாநிதி பொன்னுச்சாமி கேசவராஜ் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து வேலணை பிரதேசசபையின் மக்கள் பணிக்காக சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.


















