-த.சுபேசன்-
தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழிப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அரச வீட்டுத்திட்ட வீடுகளை காணி இல்லாத தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது, நாவற்குழிப் பகுதியில் கடந்த காலங்களில் பெரும்பான்மையின மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளை விற்பனை செய்திருப்பதாகவும், மேலும் பலர் வீடுகளை பயன்படுத்தாத நிலை காணப்படுவதாகவும்,சிலர் அதனை விடுதிகளாக நடத்துவதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்ற 6000 ஏக்கர் தனியார் காணிகளை மூன்று மாத காலத்திற்குள் ஒழுங்குபடுத்தாவிட்டால் சுவீகரிக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தது.
அதில் 90 சதவிகிதமானவர்கள் பயங்கரவாதிகள் என பொய் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருபவர்கள்.
எனவே, அவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமது காணிகள் என உறுதிப்படுத்த முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது.
இந்த நிலையில் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கு அரச காணிகளை ஒதுக்கி அவர்கள் விருப்பப்படி விற்க, விடுதி நடத்த, ஆட்கள் இல்லாமல் இருக்க எப்படி அனுமதிக்க முடியும். இனவாத நோக்கோடு ஒதுக்கப்பட்ட காணிகளை எவ்வாறு அனுமதிப்பது? எனவே ஆட்கள் இல்லாத வீட்டுத்திட்ட வீடுகளை மீளப்பெற்று காணி அற்ற தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.


















