-த.சுபேசன்-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மூவாயிரம் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதி இதுவரை விடுவிக்கப்படாமல் அந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் யாழ். மாவட்டத்தினுடைய நாவற்குழிப் பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்ற மக்கள் அதனை விற்பனை செய்கின்ற நிலைமை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இடம்பெற்ற தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போதே அவர் மேற்படி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகள் பல விற்பனை செய்யப்பட்டும், சில விடுதிகளாக இயக்கப்பட்டும், அதே நேரம் சில வீடுகள் மூடிய நிலையிலும் காணப்படுவதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையின மக்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை ஏன் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை?
தற்போதும் மூவாயிரம் குடும்பங்கள் வீட்டுத்திட்ட மிகுதி நிதி கிடைக்காமல் போராடி வருகின்றனர். ஆனால் வீட்டுத்திட்ட வீடுகள் கிடைத்தவர்கள் அதனை விற்பனை செய்தும், விடுதி நடத்தியும் வருகின்றனர். கடந்த அரசாங்கத்தில் நடந்த தவறுகளை இந்த அரசாங்கத்தில் மாற்ற வேண்டும். என மேலும் அவர் தெரிவித்தார்.
நாவற்குழிப் பகுதியில் வீடமைப்பு அதிகாரசபையினரால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் வீடுகளை விற்பனை செய்வது, உரிய அனுமதியுடன் விடுதி நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என கூட்டத்திற்கு தலைமை வகித்த இளங்குமரன் எம்.பி தெரிவித்தார்.















