-யாழ்.மாவட்ட அரச அதிபர்-
-த.அம்பிகாவதி-
பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்களை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் நேற்று முன் தினம் அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதியோர் சேவைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இவ்வருடம்; முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் முதியோர் சேவைகள் தொடர்பிலான உரிய உத்தியோகத்தர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் பதிவினை மேற்கொள்ள விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரச அதிபர் அறிவுறுத்தினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, முதியோர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் திருமதி ஸ்பெல்மன் பாலகுமாரி மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















