-கஜிந்தன்-
பயணிகளுடன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துனருக்கு 8 நாட்கள் சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தலைவர் சூ.விமலேஸ்வரன் கூறினார்.
கடந்த 7 ஆம் திகதி அதிகாரசபையின் திடீர்பரிசோதனை உத்தியோகத்தர்கள், பேருந்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துனர் அவமதித்துள்ளார்.
அத்துடன், 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின்போது அவர் பயணிகளை மரியாதை குறைவாக பேசியமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் குறித்த நடத்துனரின் சுய ஒழுக்க மீறல் காரணமாக, சேவையில் ஈடுபடுவதற்கு, 8 நாட்கள் தொடர்ச்சியான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறிச் செயற்பட்டால், குறித்த நபருக்கும் அவரைச் சேவையில் ஈடுபடுத்தும் பேருந்து உரிமையாளருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் எவ்வித அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டாலோ, அது தொடர்பான முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மேலும் கூறினார்.


















