-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்-
கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்றபோது, கண்ணுக்குத் தெரிகின்ற பாதீனியத்தை ஏன் இவ்வளவு காலமும் ஒழிக்க முடியவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளதோடு, உயிர் கொல்லும் நச்சுச் செடியான பாதீனியத்தை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்து வரும் பாதீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கடந்த ஆண்டுகளில் பாத்தீனிய ஒழிப்புத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும் மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகக் கட்டமைப்புகள் இணைந்து இத்திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
பாதீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே அனைவரும் ஒழிப்பதற்கு முன்வருவார்கள். இங்கு முதலாம், இரண்டாம் படிமுறைகளோடு அதாவது மஞ்சள் அறிவித்தல் வழங்குவதோடு சட்ட நடைமுறைப்படுத்தல் நின்று விடுகிறது. முதலில் பாதீனியம் உள்ள இடங்களை அடையாம் கண்டு தொடர்புடைய நில உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் மஞ்சள் அறிவித்தல், சிவப்பு அறிவித்தல் எனத் தொடர்ச்சியாகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாத்திரமே மக்கள் மத்தியில் இதன் பாரதூரமான விளைவுகள் குறித்த முன்னெச்சரிக்கை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















