-யாழ்.மாநகரசபையில் தீர்மானம்-
-இ.கலைஅமுதன்-
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்று யாழ் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
யாழ்.மாநகரசபை மாதாந்த அமர்வு மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நேற்று சபா மண்டபத்தில் நடைபெற்றபோது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தை மாநகர முதல்வர் முன்மொழிந்த நிலையில் சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டபோது தேசிய மக்கள் சக்தியின் கணிசமான உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தபோதும் எதுவும் பேசாது மௌனம் காத்தனர். தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரச்சாரத காலத்திலும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாக கூறியிருந்தனர்.
ஆனால் தற்போது அச் சட்டத்தினை விட கொடுமையான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை கொண்டு வருகின்றார்கள் என சபை உறுப்பினர்கள் இதன்போது குற்றம்சாட்டினார்.
















