-வடக்கு ஆளுநர்-
பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டத்தில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம்.
உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன். நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகிறேன்.
ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்யவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்? பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள் என்றார்.


















