-செ.கபிலன்-
யாழ்.அச்செழு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27ம் திகதி அச்செழு பகுதியில் ஒருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்தபோது, அங்கிருந்த சிலர் பொலிஸாரை அடித்தும், கடித்தும், காயப்படுத்தியதாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் காயமடைந்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேகநபர்கள் மீது 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்று அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்;தர்,வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவேண்டும் என பொலிஸார் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதற்கமைய இன்று சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த மன்று உத்தரவிட்டுள்ளது.


















