-சகாக்களை தூக்கும் பொலிஸ்-
-க.சபேஷன், பா.பிரதீபன்-
கொடிகாமத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யாத பொலிஸார், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கெற்பேலி பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்தனர்.
பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றார்.
உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று, சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த இளைஞனை பாலாவி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சம்பவ தினத்தன்று, உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வருவதாக தெரிவித்தனர்.


















