அ.அன்பழகன்
பூகோள அரசியலும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் மோசடைந்து வரும் சூழலில், கடந்தவாரம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23ஆவது இந்தியா-ஆசியான் உச்சிமாநாடு தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் இராஜதந்திர மற்றும் வியூக ரீதியான ஈடுபாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
11 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும் மையத்தன்மைக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பு எப்போதும் உறுதியாக இருக்கும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ ஆதிக்கப் போக்கு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் பின்னணியில், சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசுபிக் பிராந்தியமே இந்தியாவின் தொலைநோக்கு என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘தற்போதைய உலகிற்கு மிகவும் தேவைப்படுவது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மையே’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள இந்தியாவும் ஆசியானும் தமது எதிர்காலத்தைப் போட்டியால் அல்லாமல் ஒத்துழைப்பால் வடிவமைக்க வேண்டும் என்ற வலுவான செய்தியை முன்வைத்துள்ளார்.
1992-ஆம் ஆண்டு ஒரு துறைசார் கூட்டாண்மையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தியா-ஆசியான் உரையாடல் உறவு, 1995இல் முழுமையான உரையாடல் கூட்டாண்மையாகவும், 2002இல் உச்சிமாநாட்டு நிலையிலும், 2012இல் வியூகக் கூட்டாண்மையாகவும் படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது விரிவான வியூகக் கூட்டாண்மையாக உருவெடுத்துள்ளது
2026-ஆம் ஆண்டு ”ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக’ அனுசரிக்கப்படும் நிலையில், எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் இருதரப்பு உரையாடல் உறவுகளின் 35ஆவது ஆண்டு நிறைவையும், விரிவான வியூகக் கூட்டாண்மையின் 5ஆவது ஆண்டு நிறைவையும் இரு தரப்பும் கொண்டாடவுள்ளன.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயற்பாட்டுக் கொள்கை’ இக்கூட்டாண்மைக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பாரம்பரிய கலாசாரம் மற்றும் வரலாற்றுத் தொடர்புகளையும் தாண்டி, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய நவீன துறைகளுக்கு இவ்வுறவு விரிவடைந்துள்ளது.
2014-ஆம் ஆண்டிலிருந்து மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 250 விரைவுத்திட்டங்களும் 10,000-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டுப் புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிற்கும் ஒன்பது ஆசியான் நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் செயற்படுவது இருதரப்பு நெருக்கத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மணிலா உச்சிமாநாட்டின் ‘நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஒன்பது முக்கியத் திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இவற்றில் மிக முக்கியமானது நீண்டகால ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்புத் திட்டமாகும்.
சர்வதேச வர்த்தகம், எரிசக்திப் போக்குவரத்து மற்றும் பிராந்தியப் பொருளாதார இணைப்பில் இந்தோ-பசிபிக் கடல்வழிகள் முக்கியப் பங்கு வகிப்பதால், பிராந்திய இணைப்பு, அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோரக் காவல்படை ஒத்துழைப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் கடலோடிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை இத்திட்டம் வலுப்படுத்தும்.
கடல்சார் கண்காணிப்பு மற்றும் பயணச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைகளில் வெறும் நுகர்வோராக மட்டும் நின்றுவிடாமல், இணைந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் பங்காளிகளாக இந்தியாவும் ஆசியானும் மாற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு, அவர் முன்வைத்த ஏனைய திட்டங்களில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும் ‘கூட்டு சைபர் தடயவியல் பயிற்சித் திட்டத்தை’ இந்தியா முன்மொழிந்துள்ளது.
இதேபோல், சிவில் அணுசக்தித் துறையில் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பையும், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே விண்வெளிப் புத்தாக்கத்தை ஊக்குவிக்க ‘ஆசியான்-இந்தியா விண்வெளி ஹக்கத்தான்’ (Space Hackathon) நிகழ்வையும் இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், தூய எரிசக்தித் தொழில்நுட்பங்கள், மின்னணுவியல் மற்றும் நவீன உற்பத்தித் துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் அரிய வகை மற்றும் முக்கியக் கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மீள்தன்மையை அதிகரித்துப் புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறக்கும்.
அரசாங்க மட்டத்திலான ஒத்துழைப்புக்கு இணையாக, நீண்டகால சமூக மற்றும் நிறுவன ரீதியான பிணைப்புகளை உருவாக்கும் வகையில் மக்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் இந்தியா கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்னணு விசா வழங்கப்படும் என்ற அறிவிப்பு, இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான போக்குவரத்து, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் வர்த்தகப் பயணங்களைப் பெரிதும் ஊக்குவிக்கும்.
இளைஞர் தலைவர்கள், இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தொழில் முனைவோரை ஒன்றிணைக்கும் ‘ஆசியான்-இந்தியா இளைஞர் இணைப்பு’ திட்டம், நாலந்தா பல்கலைக்கழகத்தில் ஆசியான் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை அதிகரித்தல் மற்றும் ‘வேவ்ஸ் 2027’ (WAVES 2027) நிகழ்வில் ஆசியான்-இந்தியா படைப்பாற்றல் கூட்டாண்மை அரங்கை அமைத்தல் ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரிடையே வலுவான பாலத்தை அமைக்கும்.
இம்மாநாட்டின் மற்றுமொரு முக்கிய சாதனையாக, பேரிடர் முகாமைத்துவத்தில் ஒத்துழைப்பதற்கான இந்தியா-ஆசியான் கூட்டு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இப்பிராந்தியத்தில், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், சூறாவளி மற்றும் நிலச்சரிவுகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த இரு தரப்பும் இணங்கியுள்ளன.
இதற்காகச் செயற்கைக்கோள் தரவுகள், நில அதிர்வு கண்காணிப்புத் தகவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இந்தியாவின் தேசியப் பேரிடர் முகாமைத்துவ ஆணையகத்துக்கும் ஆசியானின் பேரிடர் முகாமைத்துவ அமைப்புகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்புகள் பலப்படுத்தப்பட உள்ளன.
கூட்டுப் பயிற்சிகள், மனிதாபிமான உதவிகளை விரைந்து வழங்குதல், ஆயுதப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன், பேரிடர் அபாய மதிப்பீடு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைக்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் பெருந்தரவு ஆகியவற்றைப் பொறுப்புடனும் நெறிமுறையுடனும் பயன்படுத்துவதற்கும் இரு தரப்பும் உறுதிபூண்டுள்ளன.
அந்த வகையில் மணிலா உச்சிமாநாட்டில் இந்தியா முன்வைத்துள்ள இந்த விரிவான செயற்திட்டம், வெறும் இராஜதந்திர அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல் நடைமுறைச் சாத்தியமுள்ள நீண்டகால வியூகமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியும் ஆசியானின் செழிப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்ற பிரதமர் மோடியின் கூற்று, ‘ஆசியான் சமூகத் தொலைநோக்கு 2045’ மற்றும் இந்தியாவின் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ ஆகிய இலக்குகளை இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.

















