-வாழ்நாள் போராளி இரா. நல்லகண்ணுவின் நினைவேந்தல் நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு-
போராளிகள் என்று நாங்கள் வாய் நிறைய அழைத்தவர்களை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் என்று அழைக்கத் தொடங்கி விட்டோம். அவர்களும் தங்களை அவ்வாறுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். ஊடகங்களும் அவர்களைப் பற்றிய செய்திகளை அவ்வாறுதான் பெயர் சூட்டுகின்றன.
இராணுவ வீரர் ஒருவர் ஓய்வின் பின்னர் முன்னாள் இராணுவ வீரர் என அழைக்கப்படலாம். அதிபர் ஒருவர் இளைப்பாறிய பின்னர் ஓய்வுநிலை அதிபர் என அழைக்கப்படலாம். ஆனால் உண்மையான ஒரு போராளிக்கு முன்னாள் என்பது இல்லை. ஓய்வு நிலை என்பதும் இல்லை. அவன் ஒரு வாழ்நாள் போராளி. சாகும்வரை அவன் போராளியே என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், வாழ்நாள் போராளி இரா. நல்லகண்ணுவின் நினைவு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இரா. நல்லகண்ணு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர். பிரித்தானியாவின் ஏகாதிப்பத்தியத்துக்கு எதிராகப் போராடிய அவர் அதன் பின்னர் நிலப் பிரபுத்துவத்துக்கும், ஆண்டான் – அடிமை முறைமைக்கும், சாதியத் தீண்டாமைக்கும், சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராகப் போராடி வந்தார். இயற்கை வளங்களின் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடி வந்தார்.
ஒரு பொதுவுடைமைச் சித்தாந்தவாதியாக ஒட்டுமொத்த மானுட விடுதலைக்காகப் போராடிய அவர் ஈழத்தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் உளமார ஆதரித்தார். அவர் ஏழு ஆண்டுகள் கொடும் சிறைவாசம் அனுபவித்த பின்பும் அவரது போராட்டக் குணம் மாறவில்லை. கடைசி மூச்சுவரை போராளியாகவே வாழ்ந்த அவரை தமிழகம் இன்று வாழ்நாள் போராளியாகப் போற்றுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


















