-த.சுபேசன்-
இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் தற்போது நிலவி வருகின்ற யுத்த நிலைமை காரணமாக பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் சிக்கியுள்ளன. அதற்கு எமது நாடும் விதிவிலக்கல்ல.
இலங்கை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கோரி வருகின்றது.
தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.பகல் வேளைகளிலும் தேவையின்றி ஒளிர்கின்ற தெரு விளக்குகளை அணைத்து மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்.
அத்துடன் தெரு விளக்குகள் ஓய்வின்றி பகல் வேளையிலும் ஒளிர்வதால் அதனுடைய பயன்பாட்டு காலம் பாதியாக குறைவடைகின்றது. பின்னர் பழுதடைந்த தெருவிளக்கை மாற்ற அதிக பணம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. மின்சாரசபை ஊழியர்களுக்கும் பெருமளவான நிதி ஒதுக்கியே தெரு விளக்குகளை மாற்றுகின்றோம். இதனால் மக்களுடைய வரிப்பணமே வீணாகின்றது. இதனை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.


















