-இ.கலைஅமுதன்-
வெலி ஓயா பகுதி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மொழி உரிமை மறுக்கப்பட்டமை மிக மோசமான விடயமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறதெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா வடக்கு தவிசாளர் கிருஷ்ணவேணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மணலாறு என்பது தற்போது வெலி ஓயா என்று மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கூட்டங்களுக்கு வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று தவிசாளரும் அழைக்கப்படுவது வழமை.
கடந்த 2ம் திகதி கிவுல் ஓயாவுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து அடுத்த நாள் இந்த கூட்டம் நடைபெற்ற போது தவிசாளருக்கு வழமையாக ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு அருகில் ஒதுக்கப்படுகின்ற ஆசனத்தில் அவர் இருக்க முடியாது என்றும் கீழே இருக்குமாறும் சொல்லப்பட்டது.
ஒருங்கிணைப்புக் குழு தலைவருக்கு அருகில் ஆசனம் வெறுமையாக இருந்த நிலையில் வழமையாக ஒதுக்கப்படும் ஆசனத்தில் தவிசாளர் அமர்ந்தார். அந்தக் கூட்டம் முற்று முழுதாக சிங்களத்தில் நடத்தப்பட்டது.
அதற்கு முதலே அந்த பகுதி பிரதேச செயலாளரை சந்தித்து மொழிபெயர்ப்பு இருக்கின்றதா என்பது எல்லாம் கேட்டறிந்து தவிசாளர் அந்த கூட்டத்தில் பங்கேற்றபோதும் மொழிபெயர்ப்பு கொடுக்கப்படவில்லை. மொழிபெயர்ப்பை கேட்டபோதும் வழங்கப்படவில்லை. ஆகவே அந்த கூட்டத்தை விட்டு வெளியேறி ஊடக சந்திப்பை நடத்தி இதனை சொல்லி இருந்தார்.
ஜனாதிபதி சுதந்திர தின கொண்டாட்டத்திலும், பாராளுமன்றத்தில் சபை முதல்வர், அமைச்சர்கள் எல்லோரும் நாங்கள் இனவாதிகள் அல்ல. நாங்கள் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை நீங்கள் நடத்தும் போராட்டமே இனவாதமான போராட்டம் என மக்களிடம் சொல்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் எங்கள் தவிசாளரை புறக்கணித்து அங்குள்ள மக்களையும் புறக்கணித்து மொழிபெயர்ப்பு இல்லாமல் தனிச் சிங்களத்தில் கூட்டம் நடத்தியதை நாங்கள் எவ்வாறு வர்ணிப்பது என்று தெரியவில்லை. அதை இனவாதம் என்று சொல்வதா? அல்லது வேறு எப்படி சொல்வது? இது மிக மோசமான விடயம். அரசாங்கம் இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.


















