தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மந்திரி மனையானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்தப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றார், தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதைப்போல் தமிழரின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, மன்னன் சொத்து மக்கள் சொத்து தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்’ போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















