சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த உணவகத்துக்கு இன்று வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு செய்யப்படாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் உணவகம் சுற்றிவளைக்கப்பட்ட போது, குறித்த உணவகத்தில் கழிவு நீர் வெளியேற்றப்படாமல் ஆரோக்கியமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டதாலும், கையுறை மற்றும் தலையுறை பயன்படுத்தாமல் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாலும் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















