-கஜிந்தன்-
யாழ்.மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்து பச்சைமிளகாய் வாங்கிய நபர் அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடமிருந்து போலி துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.
நேற்று காலை மருதனார்மடம் சந்தைக்கு வந்த நபர் ஒருவர் பை ஒன்றில் வெளியில் தெரியும்படி துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததுடன், சந்தையில் வட்டிக்கு கொடுப்பது யார்? எனவும், தனிநபர் ஒருவர் தொடர்பாகவும் விசாரித்துவிட்டு பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவம் சந்தை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முடக்கி விட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதுடன் அவரிடமிருந்த போலித் துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகநபர் உளநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாக கூறியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



















