-க.கனகராசா-
மாணவர்களின் சிந்தனையை சிதைத்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையை நசுக்குவதே போதையின் விதைப்பு என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.
புனிதஹென்றியரசர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டான நிகழ்வில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தமிழினத்தின் அடையாளம் ஒழுக்கம். அதனை எந்தகாலத்திலும் இழந்துவிடக்கூடாது. ஒழுக்கத்தை இழக்கும்போது போதைக்கான பாதை திறக்கப்படுகிறது. அதற்காக உங்களை சுற்றியுள்ள அனைவரையும் நல்லவர்களாக வைத்திருங்கள். ஏனெனில் என்னையும் என்குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
தன்னில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவன் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே மாணவர்களாகிய நீங்கள் தெரியாதவர்களிடம் இருந்து எதனையும் பெற்றுக் கொள்ளாதீர்கள். இல்லை வேண்டாம் என்று சொல்ல பழகுங்கள். ஆசைவார்த்தைகளை நம்பாதீர்கள். உங்கள் நண்பர்களின் நடத்தைகளை ஆழமாக கவனியுங்கள்.ஏனெனில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு போதையை விதைப்பதற்கு காரணம் அதனை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதுடன் விரைவில் பரப்பவும் என்பதனாலாகும்.
இது இனத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்த முடியும். அறிவற்ற ஏதிலிகளாக உருவாகி தாங்களே தங்களை அழித்துக் கொள்வதற்கான பொறிமுறையே போதைவிதைப்பு. எனவே நீங்கள் விழித்துக்கொண்டால் போதையை விதைப்பவன் உறங்கி கொள்வான். நீங்கள் உறங்கிகொண்டால் போதையை விதைப்பவன் விழித்து கொள்வான். இதனால் நாம் எப்போதும் விழிப்பாகவும் விழிப்புணர்வுடனும் இருப்போம் எனத்தெரிவித்தார்.


















