-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்-
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கையின் சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுதந்திர தினம் என்பது வடக்கைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒரு கரிநாளாகப் பார்க்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ‘சொற்களை விட செயலே முக்கியம்’ என்ற அடிப்படையில் நம்பிக்கையைத் துரிதமாகக் கட்டியெழுப்பி வருகிறது.. பல தசாப்தங்களாக விடுவிக்கப்படாமல் இருந்த காணிகள் எவ்வித அரசியல் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்படுவது நல்லாட்சிக்கான சிறந்த சான்றாகும. அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி பேரனர்த்தத்தின் போது வடக்கு மாகாண சபைக்குப் போதிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவித்திருந்ததாலும் நாம் தனித்து விடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எமது மாகாணத்துக்கு வந்த பல நல்ல அபிவிருத்தித் திட்டங்களை, அவை மத்திய அரசாங்கத்திடமிருந்து வருகின்றன என்பதற்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ நாம் எதிர்த்திருக்கின்றோம். அல்லது சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்கின்றோம். ‘எதிர்ப்பதுதான் அரசியல்’ என்ற ஒரு பழமைவாத அரசியல் கலாசாரம் இங்கு வேரூன்றியிருப்பதை நாம் மறுக்க முடியாது.
ஆனால் இந்த மனப்பாங்கு எமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதை நாம் சிந்திக்க வேண்டும். அபிவிருத்தித் திட்டங்கள் வரும்போது, அவற்றை அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இதனால் எமது மக்களுக்கு என்ன நன்மை எமது இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும என்ற வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















