-ஊடகங்களை புறக்கணித்து நடந்த அவசரக் கூட்டம்-
-பா.பிரதீபன்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு 2 வீடு முழுமையாகவும், 276 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 4547 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்கள் ஊடாக தகவல் வெளியாகியுள்ளன.
நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் அனர்த்தம் தொடர்பான அவசரக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடல் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் வாட்சப் குழுவில் 9.53 மணிக்கு குறித்த கலந்துரையாடல் நடைபெறப் போவதாக தகவல் பரிமாற்றப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடல் முடிந்த பின்னர், ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் போதே அரசாங்க அதிபர் ம.பிரதீபன் யாழ்.மாவட்டத்தின் அனர்த்த பாதிப்பு தொடர்பான மேற்படி புள்ளிவிபரங்களை தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அரசாங்க அதிபர் வழங்கியிருந்த புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பும்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள இடைத்தங்கள் முகாம் தொடர்பான தகவல்களை நேரில் அறிந்து கொள்வதற்கு யாழ்.தினக்குரல் நிருபர்கள் நேற்று நண்பகல் அங்கு சென்றிருந்த போது, குறித்த பாடசாலை பூட்டப்பட்டு காணப்பட்டது.
இந்த மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதியினர் அந்த பாடசாலையில் நேற்று முன்தினம் தங்கியதாகவும், இருப்பினும் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
நேற்றுக் காலையுடன் மக்கள் முற்றுமுழுதாக வெளியேறிய இடைத்தங்கல் முகாமின் தரவுகளையும் உள்ளடக்கியே யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று அனர்த்தம் தொடர்பான அவசரக் கூட்டம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


















