-சி.ஜெகதீஸ்வரன்-
தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் வேலவளவு ஏழாலை மேற்கைச் சேர்ந்த அமிர்தபிரதீபன் வித்யா (வயது- 44) என்ற இளம் குடும்பப் பெண்ணாவார்.
மேற்படி பெண்ணிற்கு கடந்த எட்டாம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இருந்ததை அடுத்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















