மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கும், சிவில் உடையில் நின்ற பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தில் இரு பொதுமகன்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில்சென்று, அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்போது, பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா சென்ற குழு ஒன்றுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டது.
இதன்போது போதையில் இருந்த பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இருவர் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
மேலும் இதுதொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றமை தொடர்பில், பொது இடமொன்றில் நிறை போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டமை தொடர்பிலும் பொலிஸ் திணைக்கள ரீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


















