-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்-
யாழ்.மாவட்டத்திலுள்ள மூன்று இ.போ.ச சாலைகளிலும் 147 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 30 பேருந்துகள் இயங்கு நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தும் உள்ளூர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் சாலையில் 83 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 56 பேருந்துகளே சேவையில் இயங்கு நிலையில் ஈடுபடுகின்றன. பருத்தித்துறை சாலையில் 37 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 34 பேருந்துகளே இயங்கு நிலையில் சேவையில் ஈடுபடுகின்றன.
காரைநகர் சாலையில் காணப்படுகிற 27 பேருந்துகளும் இயங்கு நிலையில் தற்போதும் சேவையில் ஈடுபடுகிறது.
மேலும் யாழ்ப்பாணம் சாலையில் 42 பேருந்துகளும் பருத்தித்துறை சாலையில் 17 பேருந்துகளும் காரைநகர் சாலையில் 11 பேருந்துகளும் திருத்தப் பணிகளின் கீழ் பழுது பார்க்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















