-யாழ்.சிற்றி ஹோட்டல் நிர்வாக்தினர் தெரிவிப்பு-
-பா.பிரதீபன், க.சபேஷன்-
யாழ்ப்பாண பாரம்பரியம் மற்றும் கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய மிக தரமானதும் விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
யாழ்.நகரில் இயங்கி வந்த ‘ரில்கோ சிற்றி’ ஹோட்டல் வெளிநாட்டு முதலீட்டாளரொருவருக்கு முழுமையாக கைமாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். சிற்றி ஹோட்டலாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற போதே, யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ரில்கோ சிற்றி ஹோட்டலை நாம் முழுமையாக வாங்கியுள்ளோம். இந்நிலையில் இனிவரும் காலங்களில் இந்த ஹோட்டல் யாழ். சிற்றி ஹோட்டல் என்ற பெயருடன் இயங்கும்.
இந்த ஹோட்டலை புதிய தோற்றத்துடன் புது பொலிவுடன் நாம் இயக்கவுள்ள நிலையில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில், அதன் பாரம்பரியம் மற்றும் கலை கலாச்சாரம் என்பவை தனித்துவமானவை. அவைக்கு என ஒரு தனிப் பண்பு இருக்கிறது. அவற்றினை நாமும் மதித்து அதற்கு ஏற்றது போலவே எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
யாழ்ப்பாண ஹோட்டல்களில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள் இல்லை என்ற குற்றசாட்டுகள் உள்ளன.இவ்வாறான நிலையில்,நாம் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கவுள்ளோம்.
இது இவ்வாறிருக்க சுற்றுலா பயணிகளை வடக்கு நோக்கி கவரும் முகமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்றனர்.


















