-கஜிந்தன்-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, ஆகியோர் விமான நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.
நேற்று காலை விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும், ஆளுநர் ஆகியோர், அங்கு இடம்பெறவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் விடயங்களை பார்வையிட்டனர். இதன்போது வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்திற்கு விமானதுறை சார்ந்த பணியாளர்களை வடமாகாணத்திலிருந்து அதிகளவாக நியமித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக விமானத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து ஆளுநர் செயலகத்தில் கூட்டம் ஒன்றினையும் நடாத்தி இருந்தனர். அதன் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் பார்வையிட்டனர். விமான நிலையத்தின் விஸ்தரிப்பு மற்றும் வசதிகள் போதாமல் உள்ளமை தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டு, அபிவிருத்திகளை விரைவுபடுத்தல் போன்றன பற்றியும் இங்கே கலந்துரையாடினார்கள்.
சர்வதேச விமான நிலையமாக இருக்கின்ற பலாலி விமான நிலையத்தில் தற்போது அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படுகின்றன. அதை நிவர்த்தி செய்வதற்கு இரண்டு கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஒரு அபிவிருத்தி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் மற்றைய அபிவிருத்தி எதிர்வரும் ஜூன் மாதம் அளவில் ஆரம்பித்து, இந்த விமான நிலையம் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு விமான நிலையமாக மாற்றப்படும் என்றார்.


















