யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் விஞ்ஞான – வர்த்தக தின நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை A.P. திருமகன் அடிகளாரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா–விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ‘பரிணாமம்’ இதழின் 7ஆவது வெளியீடும் இதன்போது வெளியிடப்பட்டது.
அத்துடன், வணிக மாணவர் மன்றத்தினால் உயர்தரப் பிரிவு வணிக மாணவர்களுக்கான எதிர்பார்ப்பு வினா–விடைகளுடன் கூடிய வினாவிடைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, “இன்றைய தொழில்நுட்பப் பெரும் புரட்சியுகப் போக்கின் அடிப்படையில் எதிர்கால உலகை முற்போக்குடன் வழிநடத்த வல்லது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளா? அல்லது வணிக முதலீடுகளா?” எனும் தலைப்பில் மாணவர்களின் பட்டிமன்ற நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிக பீடப் பேராசிரியர் S. ரஜுமேஷ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், சமுர்த்தி மகா சங்கத்தின் பிரதிமுகாமையாளரும் யாழ்ப்பாணம் கம்பன் கழகத்தின் செயலாளருமான சொல்லருவி T. கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அயற்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



























