யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முற்பகல் 11.30 மணியளவில், துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்து பீடாதிபதிகள், மூன்று பேரவை உறுப்பினர்கள், பதிவாளர், நிதியாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது நிரந்தர மற்றும் உள்ளக பணியிட வெற்றிடங்கள் நிரப்புதல், தற்காலிக நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, மேலதிக நேரக் கொடுப்பனவு, இடர்கடன், வருடாந்த படி உயர்வு, ஊழியர் நலன், சுகாதாரம், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், கடமையின்போது உயிரிழந்த ஊழியருக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் தொடர்பான தாமதம் மற்றும் கிளிநொச்சி வளாக ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நல்லிணக்கம், பரஸ்பர புரிதல் மற்றும் நடைமுறை தீர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக செயற்பாடுகள் இடையூறு இன்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நேர்மறை அணுகுமுறை, ஊழியர் நலனை மேம்படுத்துவதோடு, கல்வி நிறுவனத்தின் நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


















