-இ.கலைஅமுதன்-
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கே இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி நாட்டின் சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இச்சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்பட, வீடியேடிh ஆதாரங்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்ற பொலிஸார் குறித்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வாக்குமூலம் சேகரிக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளமையால் மாணவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















