இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வடக்கின் போர்’ என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி நாளை 119 ஆவது முறையாக நடத்தப்பட உள்ளது.
119 ஆவது மூன்று நாள் போட்டி 2026 மார்ச் 5, 6 மற்றும் 7 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, 23 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்) போட்டி 2026 மார்ச் 14 ஆம் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில், புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. அத்துடன், 41 போட்டிகள் வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்தன.
மேலும், 07 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு அணித் தலைவராக அன்ரநேசன் அபிஷேக், உபதலைவராக வலன்ரைன் ஹரிஸ் ஆகியோரும் புனித பரியோவான் கல்லூரி அணியின் அணித் தலைவராக முர்பின் ரண்டியோ, உபதலைவராக உதயணன் அபிஜோய் ஷாந்த் ஆகியோர் செயற்படவுள்ளனர்.


















