-இ.கலைஅமுதன்-
தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பூர்வாங்க பணிகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.
மாவீரர் வாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த காணியில் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காட்சிப்படுத்தலும், மாவீரர் நாள் நினைவேந்தலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு குறித்த பகுதியில் வழமையாக மாவீரர் நினைவேந்தல் பணிகளை முன்னெடுக்கும் தரப்புக்கு போட்டியாக தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணி தமக்கே குறித்த காணியை வழங்க வேண்டும் என கோரிவந்தனர்.
ஒரு காணியை இரண்டு தரப்புக்கள் கோரியதால் அதை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் கடந்த அமர்வில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இம்முறை அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்து குறித்த காணியில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார்.
குறித்த யோசனையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) தவிர்ந்த யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும், உறுப்பினர்களும் வரவேற்றனர். இதனையடுத்தே குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது யாழ். மாநகர முதல்வர், பிரதி முதல்வர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வரும் மாநகர பிரதி முதல்வரும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.


















