-தேசிய மக்கள் சக்தி எம்.பி.கள் வாக்குதியளிப்பு-
-இ.கலைஅமுதன்-
யாழ். வணிகர் கழகத்திற்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.நகரில் நேற்று நடைபெற்றது.
இதன் போது தற்போதைய அரிசி விலை நிர்ணயக் கொள்கையால் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில் அரிசி விலை கட்டுப்பாடு காரணமாக சந்தை நிலைமையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விநியோகத் தடைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் சந்திக்கும் நஷ்டங்கள் குறித்து வணிகர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், குறிஞ்சாத்தீவு உப்பளத்தை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்வதில் காணப்படும் நிர்வாக மற்றும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் விரிவான ஆராயப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மாகாண முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும் யாழ். மாவட்ட வணிகர்கள், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதிநிதிகளால் கோரப்பட்டது.
இவ்வாறான நிலையில்,முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக உரிய அமைச்சுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுப்பதாக இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களால் வாக்குறுதியளிக்கப்பட்டது.


















