-மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர்-
-த.அம்பிகாவதி-
போர் தின்ற வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் குடும்ப நிர்வாகம் தாண்டி ஓர் ஒப்பந்ற தியாக வரலாற்றை கொண்டது என வடமாகாண ஆளுநர், சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் என்.வேதநாயகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
சர்வதேச மகளிர் தினத்தில் எமது வடக்கு மாகாணப் பெண்களுக்கும், உலகெங்கும் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் அதியுயர் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றேன்.
போர் தின்று தீர்த்த எமது வடக்கு மண்ணில், பெண்களின் வகிபாகம் என்பது வெறுமனே குடும்ப நிர்வாகம் என்பதையும் தாண்டி, ஓர் ஒப்பற்ற தியாக வரலாறாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, எமது மாகாணமானது பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகளவில் கொண்டதொரு நிலப்பரப்பாகும்.
குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர்களை இழந்த நிலையிலும், பெருந்துயரங்களுக்கு மத்தியிலும், அந்தக் குடும்பங்கள் இன்றுவரை சிதைந்து போகாமல் இயங்கு நிலையில் இருப்பதற்கு,
எமது பெண்களின் அசாத்தியமான வைராக்கியமும், ஈடுஇணையற்ற சிறப்பான தலைமைத்துவமுமே பிரதான காரணமாகும். தம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும், சமூகத்தின் இருப்புக்காகவும் அவர்கள் நாளாந்தம் புரியும் தியாகங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
அதேவேளை, போரின் பெருவடுக்களைச் சுமந்தவாறு, தமது அன்புக்குரிய உறவுகளைத் தொலைத்துவிட்டு, அவர்களை இன்றும் கண்ணீரோடு தேடிக் கொண்டிருக்கும் எமது சகோதரிகளின் பெருவலியை இந்த நாளில் நான் மிக ஆழமாக உணர்கின்றேன்.
உறவுகளைத் தேடும் அவர்களின் நெடிய போராட்டமும், சளைக்காத மனவுறுதியும்கூடப் பெண்மையின் அதியுயர் பலத்தின் வெளிப்பாடே ஆகும். உங்களின் காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்;. உங்களின் நியாயமான தேடல்களுக்கு மனதமைதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த நாளில் எனது பிரார்த்தனையாகும்.
உங்களின் வலிகளைப் பகிர்ந்துகொள்வதில் மாகாண நிர்வாகமும் உங்களுடன் என்றும் துணைநிற்கும்.
சர்வதேச மகளிர் தினம் என்பது மார்ச் 8ஆம் திகதியோடு முடிந்துவிடும் ஓர் நாள் கொண்டாட்ட நிகழ்வல்ல. அது பெண்களின் உரிமைகளை, அவர்களின் சமத்துவத்தை, பொருளாதாரச் சுதந்திரத்தை மற்றும் சமூகப் பாதுகாப்பை ஆண்டின் 365 நாள்களும் உறுதி செய்வதற்கான ஒரு தொடர் பயணமாகும்.
பெண்களைச் சமூகத்தின் சம பங்காளிகளாக ஏற்று, அவர்களை சகல துறைகளிலும் வலுவூட்டுவதே ஒரு நாகரிகச் சமூகத்தின் அடையாளமாகும். எமது மாகாணப் பெண்களின், குறிப்பாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காக வடக்கு மாகாண நிர்வாகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்பதை இந்த நன்னாளில் உறுதியளிக்கின்றேன்.
துயரங்களைத் துணிவாக்கி, தடைகளைத் தகர்த்துத் தாமரை இலையின் நீர்த்துளி போல் தூய்மையாகவும், இரும்பைப் போல் உறுதியாகவும் நிமிர்ந்து நிற்கும் எமது சகோதரிகள், அனைவருக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் – என்றார்.


















